நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜயகாந்தின் மறைவுக்குப் பின்னரும், அவரது எளிமை மற்றும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
விஜயகாந்த் தனது சொந்த சொத்தை மட்டுமல்ல, அவரது தந்தை வாங்கி வைத்திருந்த சொத்தையும் ஏழைகளுக்கு தானமாக வழங்கியுள்ளார். திருப்பரங்குன்றம் பெரிய ஆலங்குளம் எனும் இடத்தில் கிருஷ்ணன் என்பவரிடம் விஜயகாந்தின் தந்தை அழகர்சாமி 7 ஏக்கர் நிலத்தை மகனின் எதிர்காலத்திற்காக வாங்கினார். விஜயகாந்த் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்ததும் அந்த இடத்தை ஏழைகளுக்கு அரசு மூலம் தானமாக வழங்க முடிவு செய்தார்.
1998ம் வருடம் அந்த இடம் மாவட்ட கலெக்டர் மூலமாக ஏழைகளுக்கு கொடுக்கப்பட்டது. அதன் இன்றைய மதிப்பு 21 கோடியாகும். அந்த இடத்தில் குடியிருக்கும் சோனைமுத்து, துரைப்பாண்டி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்பே இந்த இடத்தை எங்களுக்கு கொடுத்தார். அதில்தான் நாங்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். அவர் இப்போது மறைந்துவிட்டாலும் அவர் எங்களுக்கு இருப்பிடம் கொடுத்த, வாழ்வளித்த கடவுளாகவே காட்சி அளிக்கிறார்” என மிகழும் நெகிழ்ச்சியுடன் பேசினர்.
இப்படி வெளியே தெரியாமல் விஜயகாந்த் பலருக்கும் உதவி இருக்கிறார். பலரை படிக்கவும் வைத்திருக்கிறார். இதைப் பற்றியெல்லாம் எங்கேயும், எப்போதும் அவர் பெருமையாக பேசிக்கொண்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்தின் எளிமை மற்றும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, பொதுமக்கள் மத்தியில் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்து வருகிறது.
