தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித் குமார், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் “விடாமுயற்சி” படத்தில் நடித்து வருகிறார். அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி இதுவரை இயக்கிய படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. எனவே, அஜித் – மகிழ் திருமேனி கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் ஷூட்டிங்கில் அஜித்குமார் மும்முரமாக நடித்து வருகிறார். இதுவரை இரண்டு ஷெட்யூல்களில் அவர் கலந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது தனது மகன் ஆத்விக் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ஒரு குட்டி பிரேக் எடுத்துள்ளார். அஜித் பிரேக் எடுத்தாலும் மகிழ் திருமேனி மற்ற போர்ஷன்களை விறுவிறுப்பாக ஷூட் செய்து வருகிறார்.
இந்நிலையில், அஜித் நடித்த “சிட்டிசன்” படத்துக்கு கமல் ஹாசன் கொடுத்த ஐடியா பற்றி தெரியவந்துள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் சரவண சுப்பையா அளித்த பேட்டி ஒன்றில், “முகவரி படத்துக்கு பிறகுதான் அஜித்தின் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 15ஆவது நாளில் நடிக்க வந்த படம்தான் சிட்டிசன் திரைப்படம். அந்த சமயத்தில் தனது திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக கமல் ஹாசனை பார்க்க சென்றார்.
அஜித்தை கமல் ஹாசன் பார்த்ததும் சிட்டிசன் என்று சொல்லி அழைத்தார். அப்போது படம் குறித்து நிறைய விஷயங்களை இரண்டு பேரும் பேசியிருக்கிறார்கள். அந்த உரையாடலின்போது, ஹேராம் படத்தில் எனக்கு மேக்கப் போட்டவர்களை வேண்டுமானால் இந்தப் படத்துக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். அற்புதமாக பணியாற்றுகிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்.
கமல் ஹாசன் அப்படி சொல்லும்வரை சிட்டிசன் படத்தில் அஜித்துக்கு மேக்கப் போடுவதற்கு; இந்தியன் படத்தில் மேக்கப் போட்டவர்களை பயன்படுத்தத்தான் திட்டமிட்டிருந்தோம். ஆனால் கமல் ஹாசனே இப்படி சொல்லிவிட்டதால் உடனடியாக ஹேராம் படத்துக்கு மேக்கப் போட்டவர்களை கமிட் செய்துவிட்டோம்” என்றார்.
அஜித் நடித்த படங்களில் “சிட்டிசன்” முக்கியமான படம். பல கெட்டப்புகளில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருப்பார் அவர். முக்கியமாக படத்தின் கதையும் சமூக அக்கறை கொண்டதாக இருக்கும். “சிட்டிசன்” படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியானது. இதில் அஜித், வசுந்துரா தாஸ், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது அஜித் கமர்ஷியல் பாதையில் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் 2000களின் ஆரம்பத்தில் அவரது கதை தேர்வு வித்தியாசமாகவே இருந்தன. அந்த மாதிரியும் அவர் இப்போது நடிக்க வேண்டும் என்பது அஜித் ரசிகர்களிடையே ஒரு தரப்பினருக்கு மிகப்பெரிய ஆசையாக இருப்பது கவனிக்கத்தக்கது.
விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கோ அல்லது தீபாவளிக்கோ படம் ரிலீஸாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
