தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு, கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. – The Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவும் நடிகர் விஜய்யும் இணைந்து ஒரு பாடலைப் பாட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடலை கங்கை அமரன் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இளையராஜா – விஜய் இணைந்து பாடும் பாடல் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதியாக, 2001 ஆம் ஆண்டில் சித்திக் இயக்கத்தில் வெளியான விஜய்யின் பிரெண்ட்ஸ் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். 23 ஆண்டுகள் கழித்து விஜய் படத்தில் இளையராஜா பாட இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பாடலின் வெளியீடு எப்போது என்பதற்கான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்தப் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
