தமிழ் சினிமாவில் டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் தற்போது ராஜாஜி, சுஷ்மா ராஜேந்திரன் ஆகியோருடன் இணைந்து நடித்த ‘டிக் டாக்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த ஜனவரி 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படம் தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால், தியேட்டரில் சென்று பார்த்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், படத்தில் பிரியங்கா மோகன் நடித்த 20 நிமிட காட்சிகள் மாயமாகி இருந்தன. இதனால் கதை புரியாமல் ரசிகர்கள் தவித்துள்ளனர்.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் மதன் குமார், பட ஹீரோ ராஜாஜி, படத்தின் இயக்குனர் மதன் குமார் ஆகியோர் நிருபர்களிடம் பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
“டிக் டாக் படத்தை கஷ்டப்பட்டு எடுத்து திரைக்கு கொண்டு வந்தோம். இந்தப் படத்துக்கு தியேட்டர்கள் சரியாக கிடைக்கவில்லை. கிடைத்த பல தியேட்டர்களில் 20 நிமிடம் 42 நொடிகள் ஓடும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரியங்கா மோகன் இதில் இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகள், அவரது பாடல் காட்சிகள் உள்பட 4வது ரீல் படத்தில் இல்லை.
இது பற்றி படத்தில் பணியாற்றிய டிஎஸ்ஆர் கியூப் நிறுவனத்திடம் பேசினோம். இது தொழில்நுட்ப கோளாறு என சாதாரணமாக கூறுகிறார்கள். அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முயற்சித்து வருகிறோம்.”
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் முதலில் நடித்த படம் ‘டிக் டாக்’. சில ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இந்தப் படம் வெளிவந்துள்ளது. இந்தப் படத்தில் அவர் படுக்கை அறை காட்சியில் நடித்துள்ளார். தனக்கு இப்போதிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அவர் தான் நடித்த காட்சிகளை நீக்க செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரியங்கா மோகன் எந்த பதிலும் வெளியிடவில்லை.
