சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 ரொக்கமும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக, பட்ஜெட் பற்றாக்குறை ஏற்பட்டதால், இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 ரொக்கம் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த அறிவிப்பு பொதுமக்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. பல எதிர்க்கட்சிகளும் ரூ.1,000 ரொக்கம் வழங்க வலியுறுத்தின.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
அதன்படி, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை கார்டுதாரர்கள், பொருளில்லா கார்டுதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பரிசாக ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும்.
மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகையினை 10ம் தேதியே ஒரு கோடியே 15 லட்சம் மகளிரின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.
