கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் நடிகர் யாஷ் ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நடிகர் யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு 25 அடி உயர கட் அவுட் வைக்கும்போது இந்த விபத்து நடந்துள்ளது.
நேற்று இரவு சுருங்கி கிராமத்தில் நடிகர் யாஷ் ரசிகர் மன்ற சார்பில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு கட் அவுட் வைத்து மாலையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ரசிகர்கள் 25 அடி உயர கட் அவுட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கட் அவுட் நிறுத்தி வைக்கும்போது மேலே இருந்த மின்கம்பிகள் உரசியதில் 4 பேருக்கு மின்சாரம் பாய்ந்தது. அவர்களை காப்பற்ற சென்ற மேலும் இருவருக்கும் மின்சாரம் தாக்கியது.
மின்சாரம் தாக்கியதில் ஹனுமந்த (25), முரளி நடவினமணி (28), நவீன் (22) ஆகிய மூன்று பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேருக்கு மின்சாரம் தாக்கியதில் தீக்காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கடக் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரணம் என்ன?
கட் அவுட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரசிகர்கள் பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மின் கம்பிகள் உரசியதைக் கண்டதும் உடனடியாக மின்சாரம் துண்டிக்காமல் இருந்ததும் மற்றவர்களுக்கு மின்சாரம் தாக்கியதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த விபத்து ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் யாஷ் இந்த விபத்து குறித்து அறிந்து வேதனையடைந்துள்ளார். அவர் தனது ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
