நடிகை நயன்தாராவின் 75-வது திரைப்படம், ‘அன்னபூரணி’. இப்படத்தில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஃபர்ஜான் என்ற கதாபாத்திரம், கதாநாயகியை இறைச்சி சாப்பிட வைப்பதற்காக ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்று கூறுவது போலவும் அர்ச்சகர் மகளான கதாநாயகி ‘நமாஸ்’ செய்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவை இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி சமூக வலைதளங்களில் இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. பலரும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள் இடம்பெற்றது தொடர்பாக படத்தை இணைந்து தயாரித்த ஜீ நிறுவனம் விஷ்வ இந்து பரிஷர் அமைப்பிடம் மன்னிப்பு கோரியுள்ளது. அக்கடிதத்தில் ‘படத்தில் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கும் வரை அப்படத்தை நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்குவதாக உறுதியளிக்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் இடம்பெற்ற மத உணர்வுகளை புண்படுத்தும் வசனங்களை நீக்கிவிட்டு மீண்டும் படத்தை வெளியிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
