தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித்குமார். இவர் கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களை சந்திப்பதில்லை, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை, பத்திரிகையாளர்களை சந்திப்பது இல்லை. இதன் காரணமாக, அஜித் ஏன் தனி வழியில் செல்கிறார் என பலருக்கும் சந்தேகம் இருந்தது.
இந்த சந்தேகத்தை ஒரு ரசிகர் தீர்த்து வைத்துள்ளார். விமான நிலையத்தில் அஜித்தை சந்தித்த அந்த ரசிகர், அவரை ஏன் இன்டர்வியூ, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று கேட்டுள்ளார்.
அதற்கு அஜித்குமார், “ரசிகனாக இருக்கலாம், ரசிகனாக மட்டுமே இருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். என் படம் வெளிவருகிறது என்றால், அதற்கு சில நாட்களுக்கு முன்பே கொண்டாட்டங்களை ஆரம்பித்து விடுகிறார்கள். அது எனக்கு மிகவும் அதிகமாக இருப்பதாக உணர்கிறேன்.
அப்போது அவர்களுடைய நேரத்தை என் படத்திற்காக செலவு செய்கிறார்கள். இதுவே ஒரு நிகழ்ச்சி பங்கேற்கிறேன் என்றால், அந்த நிகழ்ச்சிக்காக அவருடைய நேரத்தை ஒதுக்குவார்கள். அப்படி செய்யக்கூடாது.
நான் நடிக்கிறேன், நான் சம்பாதிக்கிறேன், எனது குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன். அதுபோல்தான் அவர்களும் குடும்பத்தை முதலில் பார்க்க வேண்டும். என்னை ஒரு நடிகராக மட்டுமே பாருங்கள். ஒரு ரோல் மாடலாக ரசிகர்கள் என்னை பார்க்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
அஜித்தின் இந்தப் பதிலை கேட்ட ரசிகர், அது சரியானது என்று கூறியுள்ளார். அஜித்தின் இந்த முடிவை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
