தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான ராதாரவி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ராதாரவி, “வட இந்திய நடிகைகளை இங்கு அழைத்து வந்து நடிக்க வைக்கிறார்கள். நம்ம ஊரில் நடிகைகளே இல்லையா? நம்ம ஊர் நடிகைகளை படங்களில் நடிக்க வைத்தால், படமும் சீக்கிரம் முடியும், லட்சக்கணக்கில் ஆகும் செலவையும் குறைக்கலாம்.
ஆனால் எங்கிருந்தோ வரும் வட இந்திய ஆட்களை பிடித்து தமிழ் படத்தில் நடிக்க வைக்கிறீர்கள். அவர்கள் பொட்டுத்துணிக்கூட இல்லாமல் நடிக்கிறார்கள். அவர்கள் ஊரில் அணியும் ஆடையுடன் இங்கே வருகிறார்கள். அவர்களுக்கு நம்முடைய ஆடையை கொடுத்து அணிவித்து, நம்ம ஊரு பெண் போல் மாற்றிவிடுகிறீர்கள். அவர்களுக்கு தமிழும் வராது, உதட்டு அசைவும் வேறுமாதிரி இருக்கும். பின்ன எதற்கு வட இந்திய நடிகைகளை இங்கே நடிக்க வைக்கிறீர்கள் என்றே புரியவில்லை. தமிழ் நாட்டில் அழகான நடிகைகளே இல்லையா,தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுங்கள்.” என்று பேசி இருந்தார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இணையவாசிகள், மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து பேசிய போது, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்தது. அதன்பேரில் அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை விட மோசமாக பேசிய ராதாரவி மீது அப்போது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ராதாரவியின் இந்த பேச்சு, தமிழ் சினிமாவில் வட இந்திய நடிகைகள் குறித்த நிலவும் பாகுபாட்டை மேலும் அதிகரிக்கும் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர். மேலும், ராதாரவி ஒரு முன்னணி நடிகர் என்ற நிலையில், அவர் இப்படி பேசுவது மிகவும் வருத்தத்திற்குரியது என்று அவர்கள் கூறுகின்றனர்.
