தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில், அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான “அன்னபூரணி” திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வெற்றி பெற்றது. கடந்த டிசம்பர் 29ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான இந்தப் படம், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக பல்வேறு இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின.
குறிப்பாக, படத்தில் வரும் ஒரு காட்சியில், கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டதாக ராமாயணத்தை மேற்கோள் காட்டி பேசும் வசனம், இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து இந்தப் படம் நீக்கப்பட்டது.
இந்த சர்ச்சையின் மத்தியில், நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “அன்னபூரணி மூலம் ஒரு நேர்மையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள், எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்திவிட்டோம். கடவுளின் மீது மிகவும் நம்பிக்கை கொண்ட நான், இதை உள்நோக்கத்துடன் செய்யவில்லை. அதையும் மீறி உங்களை புண்படுத்தி இருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது படக்குழுவின் நோக்கமல்ல. எங்களை அறியாமலேயே சிலரது மனதை புண்படுத்தி இருப்பதாக உணர்கிறோம். மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிப்பதாகவும்” நயன்தாரா தெரிவித்துள்ளார்.
அன்னபூரணி படம் வெறும் வணிக நோக்கில் எடுக்கப்பட்ட படமல்ல, ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சித்தோம். கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் நான், ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் துளியும் எனக்கோ, படக்குழுவுக்கோ இல்லை. நேர்மறையான எண்ணங்களை பரப்புவது ஒன்றே தனது திரைப்பயணத்தின் நோக்கம் என்றும் தனது அறிக்கை குறிப்பிட்டுள்ளார்.
நயன்தாராவின் இந்த மன்னிப்புக்கேட்டுக் கொள்ளும் அறிக்கை, சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
