கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனா தொற்றால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், கொல்கத்தாவில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பது மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் இந்தாண்டு கரோனாவால் இது மூன்றாவது மரணம் என்று சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மூச்சுத் திணறல் காரணமாக தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆஷிஷ் ஹஸ்ரா என்ற இளைஞருக்கு மூளைக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பெலியாகட்டா ஐடி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஹஸ்ராவின் உடல்நிலை மோசமடைந்து ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார்.
ஹஸ்ராவின் உடல் கொல்கத்தா மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. திங்கள்கிழமை மாலை கரோனா நெறிமுறைகளை பின்பற்றி அவரது இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.
கடந்த ஜனவரியில் நகரத்தில் ஒருவரும், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத்தில் ஒருவரும் கரோனாவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
