இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியதைத் தொடர்ந்து, அவருக்கு பதிலாக அருண் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள ‘தக் லைஃப்’ படத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்கள் நடந்த நிலையில், கமல்ஹாசன் அமெரிக்கா சென்றதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கமல்ஹாசன், தேர்தல் முடிந்த பிறகு ‘தக் லைஃப்’ படப்பிடிப்பில் மீண்டும் இணைய உள்ளார்.
படப்பிடிப்பு தாமதமானதால், தேதி பிரச்சினை காரணமாக துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இப்படத்தில் இருந்து விலகினர்.
துல்கர் சல்மனுக்கு பதில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், ஜெயம் ரவிக்கு பதிலாக அருண் விஜய் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
‘வணங்கான்’ படத்தை முடித்துள்ள அருண் விஜய், ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
‘தக் லைஃப்’ படத்தில் நடிகர் மாற்றம் குறித்து உங்கள் கருத்து என்ன?
