நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்தில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா, பாவெல் நவகீதன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
வெளிநாட்டில் படமாக்கவேண்டிய காட்சிகள் மட்டும் கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் படத்தின் சில சண்டைக் காட்சிகளைப் படமாக்க ரஷ்யா சென்றிருக்கிறது படக்குழு.
இந்நிலையில் தன்னுடைய காட்சிகளை முடித்துக் கொடுத்த அஜித், ரஷ்யாவில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு உலகளாவிய பைக் பயணம் குறித்து அஜித் பரிசீலித்து வந்ததாகவும் தற்போது முதல் கட்டமாக ரஷ்யாவில் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக ரஷ்யாவில் சுமார் 5,000 கி.மீ. அஜித் பைக் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘வலிமை’ படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்தபோது அங்கிருந்து சுமார் 10,000 கி.மீ. வடகிழக்கு மாநிலங்கள் வரை சாலைப் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.