Saturday, December 2, 2023

நடிகர் விஷால் ரூ.15 கோடி செலுத்த வேண்டும்… உயர்நீதிமன்றம் அதிரடி!

லைகா நிறுவனத்திடம் 21 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரத்தில், 15 கோடி ரூபாயை நடிகர் விஷால் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், தொகையை செலுத்த தவறினால் விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு, செலுத்தியது.

இது சம்பந்தமாக விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடனை திருப்பி செலுத்தாமல், உத்தரவாதத்தை மீறி, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை விஷால் பிலிம் பேக்டரி வெளியிட தடை கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் வங்கியில் நிரந்தர வைப்பீடாக டிபாசிட் செய்யவும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யும்படியும் விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தது.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வு, 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் விஷால் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளனர்.

அவ்வாறு செலுத்தாவிட்டால் தனி நீதிபதியிடம் உள்ள பிரதான வழக்கில் தீர்ப்பு வரும் வரை ‘விஷால் பிலிம் பேக்டிரி’ தயாரிக்கும் படங்களை திரையரங்குகள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடை விதித்தும் உத்தரவிட்டு மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles