விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி 19-வது வார்டில், அதிமுக சார்பாக போட்டியிட்ட சுகுணாதேவி(52) என்பவர் 215 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடைந்ததால், விரக்தி தாங்க முடியாமல் இவரின் கணவர் நாகராஜன் (58) விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். திமுக வேட்பாளர் சுபிதா 595 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பல ஆண்டுகளாக அதிமுக கோட்டையாக இருந்து வந்த இடங்களையும் கைப்பற்றி திமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி 24 வார்டுகளில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடத்தை பிடித்து வெற்றி பெற்றது. இந்தநிலையில் 19வது வார்டு பகுதியில் மொத்தம் 930 வாக்குகள் பதிவானது. இதில் அதிமுக சார்பில் சுகுணா என்பவர் போட்டியிட்டார். சுகுணா 215 வாக்குகள் பெற்ற நிலையில் இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுபிதா 595 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இதனால் மனமுடைந்த அதிமுக வேட்பாளர் சுகுணாவின் கணவர் நாகராஜ் (58) விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜ் உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட நாகராஜ் நாகராஜ் சாத்தூர் நகராட்சியில் மேஸ்திரியாக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.