2011-ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ‘அட்டகத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவின் கவனத்தை பெற்ற இவர், தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் போன்ற படங்களில் நடித்து முன்னனி நடிகையானார்.
காக்கா முட்டை படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.
தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “கனா” படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.
அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக எங்க வீட்டு பிள்ளை படத்தில் நடித்து அசத்தினார். க/ பெ ரணசிங்கம் படத்தில் வெளிநாட்டில் இறந்த கணவனது உடலை கொண்டு வர போராடும் சாமானிய பெண்ணின் வலிகளை கண்முன் காட்டி மிரளவைத்தார். தற்போது இவர் நடித்துள்ள ‘திட்டம் இரண்டு’ திரைப்படம் சோனி லைவில் ரிலீஸாகிவுள்ளது.
தமிழில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமாவில் பட்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது,
“எனக்கு சினிமா பின்னணி இல்லை. நடிகையான எனது பயணமும் சுலபமாக இல்லை. ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். எனது குடும்பம் சென்னை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்தது. 8 வயதில் தந்தையை இழந்தேன். படிக்காத எனது அம்மா குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார். அம்மாவுக்கு இந்தி, ஆங்கிலம் தெரியாது. ஆனாலும் மும்பை சென்று புடவைகள் வாங்கி வந்து கொஞ்சம் அதிக விலை வைத்து சென்னையில் விற்பனை செய்வார்.
எனக்கு பெரிய கனவு எதுவும் இல்லை. சினிமாவில் நடிகையாக முயற்சி செய்தபோது எத்தனை தடைகள் வருமோ அத்தனையும் வந்தது. எல்லாவற்றையும் எதிர்கொண்டேன்.
பாலியல் ரீதியாக எனது உருவம், தோற்றம், முகம், சரும நிறம் போன்றவற்றை வைத்து கொடூரமாக கேலி செய்தார்கள். எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டேன். எனது முதல் படம் சரியாக ஓடவில்லை. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன. இப்போதும் எனது சினிமா வாழ்க்கை போராட்டமாகத்தான் உள்ளது.” எனக் கூறினார்.