பிரபல இயக்குநர் பாலா இயக்கிய ’அவன்-இவன்’ என்ற திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளதாக சிங்கம்பட்டி ஜமீன் வாரிசுகள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் விஷால், ஆர்யா, ஜி.எம்.குமார், மதுஷாலினி, ஜனனி அய்யர் உட்பட பலர் நடித்த திரைப்படம் ‘அவன்-இவன்’. இந்தப் படத்தில், சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும், சொரிமுத்து அய்யனார் குறித்தும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக சிங்கம்பட்டி ஜமீனின் வாரிசு ஒருவர் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஆஜராகவில்லை என, இயக்குநர் பாலா மற்றும் நடிகர் ஆர்யாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் வெளியாக இருந்தது.
ஆனால், நீதிமன்றத்தில் இயக்குநர் பாலா ஆஜராகவில்லை என்பதால் வரும் 19ம் தேதி இந்த தீர்ப்பு வெளியாகும் என்றும், தீர்ப்பு நாளில் இயக்குநர் பாலா கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று (19ம் தேதி) காலை அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் இயக்குநர் பாலா ஆஜரானார். சற்று முன் வெளியான அந்த வழக்கின் தீர்ப்பில், ‘அவன் இவன்’ படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து இயக்குநர் பாலா விடுவிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். இதனையடுத்து, இந்த வழக்கில் இருந்து பாலா விடுதலை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.