தமிழ்நாட்டின் பிரபல யூடியூப் பிரபலம் டிடிஎப் வாசன், தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 20 நாட்களாக முதுகு வலிக்கு கேரளாவில் சிகிச்சை எடுத்து வந்த டிடிஎப் வாசன், இன்று சிகிச்சை முடிந்து சென்னை திரும்பியுள்ளார். இதனையடுத்து, விஜயகாந்த் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
செய்தியாளர்களை சந்தித்த டிடிஎப் வாசன், “விஜயகாந்த் அவர்கள் ஒரு மாபெரும் மனிதர். தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று கூறுவார்கள். அதை செய்த மாபெரும் மனிதர் விஜயகாந்த். அவருக்கு இன்று மரியாதை செலுத்தினேன்.
முதுகு வலி காரணமாக 20 நாட்களாக கேரளாவில் சிகிச்சை எடுத்து வந்தேன். அதனால், விஜயகாந்த் நினைவிடத்திற்கு வர முடியவில்லை. இன்று சிகிச்சை முடிந்து சென்னை திரும்பியதையடுத்து, இங்கு வந்து அஞ்சலி செலுத்தினேன்.
விஜயகாந்த் அவர்களைப் போலவே நானும் அன்னதானம் செய்து வருகிறேன். இனிமேல் இன்னும் அதிகமாக செய்வேன்.
எனது நிறுவனம் மற்றொரு நிறுவனத்தை காப்பி அடித்து அது போலவே தயாரித்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது தவறானது. எனது நிறுவனத்தில் மென்பொருள், PCB board உள்ளிட்டவற்றை நாங்களே தயாரிக்கிறோம். மற்ற நிறுவனத்தை காப்பி அடிக்கவில்லை. இது போன்ற குற்றச்சாட்டுகள் தவறானது. அதற்கான விளக்கத்தை என் யூடியூப் பக்கத்தில் கொடுத்துள்ளேன்” என்று கூறினார்.
