கன்னட திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருந்து வருபவர்கள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகிணி திவேதி. இவர்கள் 2 பேரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகவும் எழுந்த வழக்கில் சிக்கியுள்ளனர். இதில் ராகிணி திவேதி ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில் படத்தில் நடித்துள்ளார்.
இதுதொடர்பாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார், நடிகைகள் சஞ்சனா, ராகிணியை கைது செய்து சிறையில் அடைத்திருந்தார்கள். தற்போது 2 பேரும் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து விட்டனர். இதில் சஞ்சனா கல்ராணி தமிழ் திரைப்பட நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார்.
இதற்கிடையில், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக அவர்களது தலைமுடி தடய அறிவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இதில் நடிகைகள் சஞ்சனா, ராகிணி போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரியவந்தது. இதனால் இரு நடிகைகளும் மீண்டும் கைது செய்யப்படலாம் என நெருக்கடி எழுந்துள்ளது.
இந்த நிலையில், நடிகை சஞ்சனா பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தாய் ரேஷ்மா கல்ராணி செய்தியாளர்களிடம் பேசியப்போது, எனது மகள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எந்த தவறும் செய்யவில்லை. எல்லா பிரச்சினைகளுக்கும் கடவுள் இருக்கிறார். பழைய சம்பவங்களை நினைத்து பார்க்க விரும்பவில்லை. அதனை மறந்து புதிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார் எனக்கூறினார்.