தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார். குறிப்பாக ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராஷ்மிகா, தமிழில் ‘சுல்தான்’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.
அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த ‘புஷ்பா’ படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் மிரட்டலான தோற்றத்தில் நடித்துள்ளார்.
ஸ்ரீ வள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா நடித்துள்ளார். ‘புஷ்பா’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, என மொத்தம் ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப்படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே புஷ்பா படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘அன்பு சென்னை மக்களே! ‘புஷ்பா’ படத்தின் வெற்றி விழாவிற்கு என்னால் சென்னைக்கு வருகை தந்து கலந்து கொள்ள முடியவில்லை.
இதற்காக நான் வருந்தினேன். பரவாயில்லை கவலை வேண்டாம். மிக விரைவில் நிஜமாகவே உங்கள் அனைவரையும் வந்து சந்திக்க திட்டமிட்டு இருக்கிறேன். கண்டிப்பாக நான் உங்களை வந்து சந்திக்கிறேன். அன்புடன் ராஷ்மிகா மந்தனா. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.