விளையாட்டுப்போட்டியை மையப்படுத்திய படங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுவருகின்றன. குறிப்பாக எதிர்நீச்சல், இறுதிச்சுற்று, சார்பட்டா பரம்பரை என அந்தப் பட்டியல் மிக நீளம். குறிப்பாக மகேந்திர சிங் தோனி, சச்சின் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்கள் இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்றன.
மேலும் 1983 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை வென்றதை அடிப்படையாகக் கொண்டு 83 என்ற படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருந்தது. ஸ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா நடித்திருந்தார். ஆனால் இந்தப் படம் ரசிகர்களை கவரத் தவறியது.
இந்த நிலையில் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கங்குலி களத்தில் எப்பொழுதும் ஆக்ரோஷமாக விளையாடுவார். இங்கிலாந்துக்கு எதிரான நாட்வெஸ்ட் டிராபி போட்டியில் இந்தியா அணி வெற்றிபெற கங்குலி தனது டி ஷர்ட்டை கழட்டி சுற்றியது சர்ச்சயை ஏற்படுத்தியது.
கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தை லவ் ரஞ்சன் தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கங்குலி வேடத்தில் நடிக்க ரன்பீர் கபூரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.