நடிகர் அஜித் தற்போது “விடாமுயற்சி” படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். தேர்தலுக்கு பிறகு, படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளது.
படத்தின் 60% படப்பிடிப்பு முடிந்த நிலையில், எஞ்சியுள்ள 40% படப்பிடிப்பை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“விடாமுயற்சி” படத்திற்கு பிறகு, அஜித் “குட் பேட் அக்லி” என்ற படத்தில் நடிக்க உள்ளார். படத்தின் பூஜைகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளன. படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கி, அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என்று தகவல்.
இந்த நிலையில், இயக்குநர் ஆதிக் திருமணத்திற்கு பிறகு முதன் முறையாக ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி அளித்த போது, அஜித் குமார் பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டார்.
“நேர்கொண்ட பார்வை” படத்திலிருந்தே அஜித் சார் எனக்கு மிகவும் நெருக்கமாகி விட்டார். எப்பொழுதும் பாசிட்டிவ்வான விஷயங்களை மட்டுமே விதைக்க முயற்சி செய்வார். அந்த பாசிட்டிவ் நிலைக்கு நம்மை தள்ள வைப்பார்,” என்று ஆதிக் கூறினார்.
“நேர்கொண்ட பார்வை” படத்தில் நடிக்கும் போதே, “நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்” என்று அஜித் சார் அப்போதே கூறியிருந்தார். மேலும் “மார்க் ஆண்டனி” படம் கூட அஜித் சாரின் உந்துதலின் பேரில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் “மார்க் ஆண்டனி” படம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே “குட் பேட் அக்லி” படம் முடிவாகி விட்டது,” என்று ஆதிக் விளக்கினார்.
“இருந்தாலும் ஒரு பெரிய வெற்றி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இவ்ளோ நாள் பொறுமையாக இருந்தேன்,” என்று ஆதிக் கூறினார். மேலும் “மார்க் ஆண்டனி 2” படம் கண்டிப்பாக வரும் என்றும், ரசிகர்களுக்காக ஒரு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் என்றும் ஆதிக் தெரிவித்தார்.
