நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது . அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல் ராகுலும், குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர்.
ஆனால் கேப்டன் கே.எல்.ராகுல் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி அனைவர்க்கும் நெஞ்சுவலியை ஏற்படுத்தினார் . மறுபுறம் டி காக் 7 ரன்னில் அவுட்டாகி பெவிலியன் சென்றார் . பின்னர் வந்த எவின் லிவிஸ்(10) மனிஷ் பாண்டே(7) அடுத்ததுத்து அவுட்டானதால், தொடக்கத்திலேயே லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து களத்திற்கு வந்த தீபக் ஹூடாவும் (55) ஆயுஷ் படோனியும் (54) அதிரடியாக ஆடி அணியை சரிவில் இருந்து மெல்ல மெல்ல மீட்டனர். இவர்களின் சரவெடி ஆட்டத்தால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது .குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சுப்மன் கில் மற்றும் மேத்யூ வேட் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் சுப்மன் கில் (0) ரன் ஏதும் எடுக்காமலே ராகுல் போல ஐவரும் டக் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய விஜய் சங்கர் 4 ரன்களில் வெளியேறினார்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, மேத்யூ வேட்டுடன் இணைந்து ரன் ரேட்டை உயர்த்தி வந்தநிலையில், 33 ரன்களுக்கு அவரும் கேட்ச் கொடுத்து வெளியேறினார் .அவர் போன வேகத்தில் மேத்யூ வேட் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த டேவிட் மில்லர் மற்றும் ராகுல் தேவாட்டியா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது . அவர்களின் அதிரடி ஆட்டம் அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தியது. இந்நிலையில் இந்த ஜோடியில் மில்லர் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இறுதியில் அதிரடி காட்டிய ராகுல் தேவாட்டியா 40 (24) ரன்களும், மனோகர் 15 (7) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் குஜராத் அணி 19.4 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.