உடல் பருமன் உலகளவில் அதிகரித்து வரும் ஒரு முக்கிய பிரச்சனையாக மாறி வருகிறது. உடல் எடையை குறைக்க பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமன் ஒருவரின் தன்னம்பிக்கையை குறைப்பதோடு, பலவிதமான உடல்நல கோளாறுகளுக்கும் வழிவகுக்கும். வயதிற்கு ஏற்ப உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
எனவே, உங்களுக்கு உடல் பருமன் பிரச்சனை இருந்தால், அதை உடனடியாக கட்டுப்படுத்துவது அவசியம். பலர் உடல் எடையை குறைக்க ஜிம்மில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். சிலர் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றி தங்கள் எடையை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
ஆனால், அனைவருக்கும் தினமும் ஜிம் செல்லவோ அல்லது கடுமையான உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றவோ முடியாது. அப்படிப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? கவலை வேண்டாம்! சில எளிய இயற்கை வழிகளிலும் உடல் எடையை குறைக்க முடியும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நம் தினசரி உணவில் சில உணவுகள் இதில் நமக்கு உதவுகின்றன. தொப்பை கொழுப்பைக் குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் ஒரு எளிய வழி பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடை இழப்பில் வேர்க்கடலையின் நன்மைகள்:
உடல் எடையை குறைப்பது என்பது ஒரு சவாலான செயல்முறையாகும். இதற்கு கடின உழைப்பு மற்றும் சரியான உணவு தேவை. நிலக்கடலை எனப்படும் வேர்க்கடலை இந்த எடை இழப்பு பயணத்தை எளிதாக்குகிறது. இதை உட்கொள்வது புரத ஷேக் உட்கொள்வதற்கு சமமானதாக கருதப்படுகிறது. இது விரைவாக உடல் எடையை குறைக்க உதவும்.
பெரும்பாலான ஜிம்களில் பயிற்சியாளர்கள் பீநட் பட்டர் உட்கொள்ள பரிந்துரைக்கின்றனர். புரதத்தைத் தவிர, வேர்க்கடலையில் அதிக அளவு ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதனுடன் இரும்புச்சத்து, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன. அதிக புரதச்சத்து கொண்ட உணவுகள் பசியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும், தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதைத் தடுக்கின்றன. இது எடை குறைப்புக்கு உதவுகிறது.
எடை இழப்புக்கு வேர்க்கடலையை எப்படி பயன்படுத்துவது:
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு வேர்க்கடலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பல சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இது தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உள்ள அதிக புரதச்சத்து உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு, பசியை கட்டுப்படுத்தி, கூடுதல் கலோரிகளை உட்கொள்வதிலிருந்து உடலை பாதுகாக்கிறது.
