குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 14 பேருக்கு, காட்டேரி பூங்காவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி அடுத்த நஞ்சப்ப சத்திரம் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விபத்து நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் காட்டேரி பூங்கா மற்றும் பண்ணை உள்ளது. எனவே, விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவாக காட்டேரி பூங்கா அல்லது பண்ணையில் நினைவுத் தூண் அல்லது நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, நீலகிரி மாவட்ட கலெக்டர், தோட்டக்கலைத் துறை இயக்குனர் உள்ளிட்டோரிடம் சில விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக இருக்கும் என்பதால், வசதிகள் அதிகம் உள்ள காட்டேரி பூங்காவில் நினைவுச் சின்னம் அமைக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து, ராணுவ உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுப்பார். இதற்கான அறிவிப்பு ஜனவரி 5ம் தேதி கூடும் சட்டசபையில், கவர்னர் உரையில் இடம்பெறும் என கூறப்படுகிறது.