வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்ட நடிகர் சூர்யாவின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
2007- 2008, 2008- 2009 ஆகிய நிதி ஆண்டுகளில் வருமான வரி ரூ.3.11 கோடி செலுத்த வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால் 3 ஆண்டுகளுக்கு பிறகு வருமான வரி கணக்கிட்டு வசூலிக்கப்பட்டுள்ளதால் வட்டியை வசூலிக்க தடை கோரி நடிகர் சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வரி மதிப்பீட்டு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தராததால் வட்டிவிலக்கு பெற உரிமையில்லை எனவும், எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் வருமான வரித்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. வருமான வரித்துறையின் வாதத்தை ஏற்று சூர்யா மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்த நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோர் தனித்தனியே வரிவிலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதிக தொகை சம்பளம் வாங்கும் நடிகர்கள் உரிய வரியை செலுத்தவேண்டும் என நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.