அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உட்பட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் செப்.7ம் தேதி வெளியான இந்தப் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது.
இந்தப்படம் முதல்நாளில் ரூ.129.6 கோடியை உலகளவில் வசூலித்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. முதல் நாளில் இவ்வளவு தொகை வசூலித்த படம் இதுதான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் நேற்று வரை (செப்.24) ரூ.500-கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இவ்வளவு வேகமாக ரூ.500 கோடியை வசூலித்த படமும் இதுதான். உலகம் முழுவதும் இந்தப் படம் 23-ம் தேதி வரை ரூ. 989 கோடியை வசூல் செய்துள்ளது. ஆனால் நேற்றைய வசூல் படி 1000 கோடியை தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது.