என்னை கைது செய்வது என்பது நடக்காது. அப்படி நடந்தால், அது கனவில் தான் நடக்கும் என்று, வீடியோ வெளியிட்டிருந்த நடிகை மீரா மிதுனை, கேரளாவில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
மாடல் அழகியாக இருந்து நடிகையானவர் மீரா மிதுன். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் இவர், பட்டியலின சமூகத்தினரை இழிவாகப் பேசி வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், நடிகை மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் நடிகை மீரா மிதுனுக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சம்மன் கொடுத்திருந்தது. அதில், இன்று காலை 10 மணிக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் நடிகை மீரா மிதுன் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அவர் நேரில் ஆஜர் ஆகாமல் “தாராளமாக என்னை கைது செய்யுங்கள். ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா? ஆனால், என்னை கைது செய்வது என்பது நடக்காது. அப்படி நடந்தால் அது கனவில் தான் நடக்கும்” என்று, வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், கேரளாவில் ஹோட்டல் ஒன்றில் பதுங்கி இருந்த நடிகை மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவரை, சென்னைக்கு கொண்டு வர போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஏற்கெனவே நடிகர் நடிகைகளை அவதூறாக பேசியது மற்றும் கொலைமிரட்டல் விடுத்தது தொடர்பாக அவர்மீது புகார்கள் எழுந்திருந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.