பயணிகள் பேருந்து முதல் விமானம் வரை தங்கள் விரும்பும் இருக்கைகளை தேர்வு செய்து கொள்ளும் வசதி இருந்தாலும், ரயில் பயணத்தில் மட்டும் இது வரை சாத்தியமில்லை. இதற்கு தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இருந்தது.
மலிவான கட்டணம், பாதுகாப்பு மற்றும் சொகுசு பயண அனுபவம் ஆகியவற்றால் ரயில்கள் பலருக்கும் விருப்பமான தேர்வாக விளங்குகின்றன. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் பயணிக்க ரயில்கள் சிறந்த தேர்வாக கருதப்படுகிறது.
ஆனால், ரயில் டிக்கெட் கிடைப்பது பெரும் சவாலாக இருக்கும். பண்டிகை காலங்களில் டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினம். தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்தாலும் கூட, நமக்கு தேவையான லோயர் பெர்த் கிடைப்பதில் சிக்கல் இருக்கும்.
பல முதியவர்கள் மற்றும் பெண்கள் லோயர் பெர்த்தையே விரும்புவார்கள். டிக்கெட் முன்பதிவு செய்யும் போது தேவைப்படும் பெர்த் வகையை தேர்வு செய்ய முடியும் என்றாலும், லோயர் பெர்த் எளிதில் கிடைப்பதில்லை.
ஆனால், தற்போது ரயில்வே நிர்வாகம் பயணிகளின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
இனிமேல், பயணிகள் பேருந்துகளில் தேர்வு செய்வது போல ரயில்களிலும் தங்கள் விரும்பும் இருக்கைகளை தேர்வு செய்து முன்பதிவு செய்ய முடியும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன் மூலம், பயணிகள் தங்களுக்கு தேவையான ஸ்லீப்பர் இருக்கைகளை முன்கூட்டியே தேர்வு செய்து முன்பதிவு செய்ய முடியும். இந்த புதிய வசதியை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த புதிய அறிவிப்பு ரயில் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
