பிரபல பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசியபோது, இயக்குனர் பா. ரஞ்சித் ரஜினிகாந்தை பற்றி சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். அந்த வீடியோ நேற்று வெளியான நிலையில், ரஜினி ரசிகர்கள் ரஞ்சித்தை விமர்சித்து “நன்றிகெட்ட_ரஞ்சித்” என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ரஞ்சித்தின் படங்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்காக போராடும் கதைக்களமாக இருக்கும். “கபாலி” மற்றும் “காலா” போன்ற ரஜினிகாந்த் நடித்த படங்களையும் ரஞ்சித் தான் இயக்கியிருந்தார்.
பத்திரிகையாளர் ரஞ்சித்திடம், “தலித் அரசியலை உங்கள் படங்களில் ரஜினி வழியாக சொல்லி உள்ளீர்கள். இது ரஜினிக்கு தெரியுமா என்பது தெரியவில்லை. மற்ற மொழிகளில் இதே போல் பெரிய நடிகரை வைத்து இவ்வாறு படம் எடுக்க முடியாது. மேலும் மலையாள சினிமாவில் பல வருடங்களாக படங்கள் எடுக்கப்பட்டு வந்தாலும் இதுபோன்ற ஒரு படம் கூட வெளியாகவில்லை” என்று கேட்டிருந்தார்.
ரஜினியை பற்றி பேசிய போது ரஞ்சித் நக்காலாக சிரித்திருந்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் கோபமடைந்து, “ரஞ்சித்துக்கு வாய்ப்பு கொடுத்து சினிமாவில் அடையாளமும், அந்தஸ்தும் கொடுத்தது ரஜினி தான். ஆனால் இப்போது ரஜினியையே அசிங்கப்படுத்தி விட்டார்” என்று குற்றம் சாட்டினர்.
மேலும், ஆரம்பத்தில் ரஜினியிடம் வாய்ப்பு கேட்கும் போது “இது உங்களுக்கு இன்னொரு படம், ஆனால் இதுதான் என்னுடைய ஃபியூச்சர்” என்று ரஞ்சித் கூறியிருந்ததையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் சூடான விவாதத்தை கிளப்பியுள்ளது.
