டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வு பெறப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி வரும் 16ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு, 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய அணி மோதுகிறது.
ஓமைக்ரான் அச்சுறுத்தலால் தள்ளிப்போய் கொண்டே இருந்த வீரர்கள் தேர்வு சமீபத்தில் முடிந்தது. ஆனால், அதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா பெயர் இடம்பெறவில்லை. நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஜடேஜா, தற்போது ஓய்வு அறிவிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின்போது காயம் காரணமாக ஜடேஜா அணியில் இடம்பெறாமல் போனார். சிறிய காயம் தான் ஏற்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காயத்தின் தன்மை மிகப்பெரியதாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முழங்காலில் ஏற்பட்டிருக்கும் காயத்தினால் ஜடேஜா அறுவை சிகிச்சை செய்துகொள்ளவுள்ளார். அதை செய்த பிறகு சுமார் 7 மாதங்கள் வரை அவர் விளையாட முடியாது எனக் கூறப்படுகிறது.
தற்போது 33 வயதாகும் ரவீந்திர ஜடேஜா 7 மாதத்திற்கு பின் உடற்தகுதியை நிரூபித்த பிறகுதான் அணிக்கு திரும்ப முடியும். அப்போதும் கூட டெஸ்ட் கிரிக்கெட் போன்ற பெரிய போட்டிகளில் விளையாட அவரது கால்கள் ஒத்துழைக்காது. இதன் காரணமாக தற்போதே ஜடேஜா ஓய்வை அறிவிக்கும் திட்டத்திற்கு வந்துவிட்டார். எனினும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவார் எனத்தெரிகிறது.
இதுவரை இந்திய அணிக்காக 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா, 17 அரைச் சதங்களுடன் 2,195 ரன்கள் குவித்துள்ளார். அதேபோன்று பந்துவீச்சிலும் 232 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அறுவை சிகிச்சை செய்துகொள்ளவுள்ளதால் இந்திய அணி அடுத்தடுத்து மோதவிருக்கும் தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை தொடர்களில் இருந்தும் ஜடேஜா விலக வாய்ப்புள்ளது.