Friday, December 1, 2023

நயன் – விக்கி தயாரித்துள்ள ‘ராக்கி’ – முழு விமர்சனம் இதோ

நயன்தாரா– விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ராக்கி. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா, ரோகினி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். தர்புகா சிவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. மேலும் ராக்கி திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

கதைக்களம்:

இலங்கையில் நடந்த போரில் உயிர் பிழைத்து தப்பித்து தமிழ்நாட்டுக்கு வருகின்றனர் ராக்கியின் பெற்றோர். தமிழ்நாட்டில் உயிர் பிழைக்க வேண்டி ராக்கியின் தந்தை கேங்க்ஸ்டரான மணிமாறனுடன் சேர்ந்து ரவுடி தொழில் செய்கிறார். பின் தன் தந்தை இறந்த பின்பு அவர் செய்து கொண்டிருந்த தொழிலை ராக்கி செய்கிறார். மேலும், மணிமாறனின் மகனுக்கும் ராகிக்கும் இடையே போட்டி, பொறாமை, ஈகோ என பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் மணிமாறனின் மகன் ராக்கியின் அம்மாவை கொல்கிறார். பதிலுக்கு ராக்கி மணிமாறனின் மகனை கொல்கிறார்.

இதனால் மணிமாறனுக்கும் ராக்கிக்கும் இடையே பகை பூதாகரமாக வெடிக்கிறது. இதனைத் தொடர்ந்து ராக்கியின் தங்கை அமுதா காணாமல் போகிறார். இதனிடையே ராக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். பின் 17 ஆண்டுகளுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வரும் ராக்கி தன் தங்கையை கண்டுபிடித்தாரா? மணிமாறனுக்கும் ராக்கிக்கும் இடையிலான பகை தீர்ந்ததா? என்பதே படத்தின் மீதி கதை.

ராக்கி கதாபாத்திரத்தில் வசந்த் ரவி, மணிமாறன் கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்திருக்கிறார்கள். ராக்கியின் அம்மாவாக ரோகிணியும், ராக்கியின் தங்கை கதாபாத்திரத்தில் ரவீனா ரவி நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தின் டீசர் 2 ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்தது. டீசரில் ரத்தம் சொட்ட சொட்ட இருந்த நயன்தாராவின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் பயங்கரமாக வைரலாகி இருந்தது. இதனால் ரசிகர்கள் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகளுடன் இருந்தார்கள்.

 

rocky movie

உண்மையாலுமே படம் முழுக்க முழுக்க ரத்தம் தெறிக்கும் காட்சிகளும் வன்முறையும் இருக்கின்றது. ஹாலிவுட்டிலும், வேறு மொழி படங்களிலும் பார்த்த இந்த காட்சிகள் தமிழுக்கு புதுசு என்று சொல்லலாம். பல காட்சிகளில் நம்மை அறியாமலேயே பயத்தில் கண்மூட வைக்கின்றது. சொல்லப்போனால் இந்த படத்தை கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பார்க்க வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு உள்ளது. அதிலும் சில காட்சியில் எதிரியின் குடலை உருவி மாலையாகப் போடுவது பார்ப்பதற்கே மிரள வைக்கிறது.

அதுமட்டுமில்லாமல் சுத்தியலை எடுத்து கன்னத்தில் சொருகுவது, துருப்பிடித்த கத்தியால் கழுத்தை அறுப்பது என ரத்தக்களறி ஆகவே படம் முழுக்க உள்ளது. இது முழுக்க முழுக்க ஒரு கேங்க்ஸ்டர் கதையாக அமைந்திருக்கிறது. ஒரு கேங்க்ஸ்டர் அவருடன் இருக்கும் நபர்களுடன் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சினை. பின் ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய குடும்பத்தை பழி வாங்குவது என்ற கதையாக இருந்தாலும் இதை கொஞ்சம் வித்தியாசமான முறையில் கையாண்டிருக்கிறார் இயக்குனர். மேலும், படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை விறுவிறுப்பாக சென்றிருக்கின்றது.

அதுமட்டுமில்லாமல் படத்தில் ஹீரோ வசந்த் ரவி பெரிய தாதாவாக இல்லை என்றாலும் மிரட்டும் காட்சிகளில் திறமையாக நடித்து இருக்கிறார். அவர் பேசும்போது தான் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் நபரை போல இருக்கிறது. படத்தின் இரண்டாவது ஹீரோவாக திகழும் பாரதிராஜா பின்னிபெடலெடுத்து இருக்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் தாதா கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார்.

படத்தில் கதாபாத்திரங்கள் குறைவு என்றாலும் சரியான முறையில் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதேபோல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பார்வையாளர்களை அதிர செய்திருக்கிறது. படத்தில் முதல் பாதியில் கொஞ்சம் நீளமான காட்சிகள் இருப்பதால் பார்வையாளர்களை சோதித்து இருக்கிறது. அதிலும் தங்கையைத் தேடி ஒரு வீட்டுக்கு செல்லும் நாயகன் நடக்கிறார் நடந்து கொண்டே இருக்கிறார் என்பது போன்று இருக்கிறது.

அவர் நடக்கும் தேடும் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம். சில இடங்களில் ஆங்காங்கே நீள காட்சிகள் இருப்பது ரசிகர்களுக்கு கொட்டாவி வர வைத்திருக்கிறது. வழக்கமான கேங்க்ஸ்டர் கதையை கையில் எடுக்காமல் கொஞ்சம் வித்தியாசமான புதுமையாக எடுத்து ஜெயித்திருக்கிறார் ராக்கி இயக்குனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles