சூர்யா கடந்த சில வருடங்களாகவே சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அதன்படி அவர் நடித்த சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் மெகா ஹிட் ஆனது மட்டுமில்லாமல் அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுக்கொடுத்தது. இந்த சூழலில் அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துள்ளார்.
பெரிய பட்ஜெட், எதிர்பார்ப்பு
சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படத்துக்கான பட்ஜெட்தான் அதிகம். மேலும் சிவா சூர்யாவை வைத்து சம்பவம் செய்வாரா இல்லை சரித்திரம் படைப்பாரா என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். கங்குவா இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் மேல் பிஸ்னெஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் சூர்யாவின் கரியரில் முதன்முறை என்பது கவனிக்கத்தக்கது.
க்ளிம்ப்ஸ் மூலம் எதிர்பார்ப்பு அதிகரிப்பு
சிவா இயக்கத்தில் சூர்யா கமிட்டட் என்று செய்தி வெளியானதும் சூர்யா ரசிகர்கள் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். ஏனெனில் இதற்கு முன்னதாக சிவா இயக்கிய அண்ணாத்த படம் அவர்கள் கண் முன் வந்துபோனது. ஆனால் தன் மேல் சந்தேகப்பட்டவர்களுக்கு கங்குவா க்ளிம்ப்ஸ் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் இயக்குநர். க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீது நம்பிக்கை பிறந்திருக்கிறது.
பீரியட் படம் இல்லை, இரண்டு பாகங்கள்
கங்குவா படம் முழுக்க பீரியட் படமாக உருவாக்கப்படும் என முதலில் தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை. குறிப்பிட்ட பகுதி மட்டும்தான் பீரியட் படமாக கங்குவா உருவாகிறது. மற்றபடி நிகழ்காலத்தில் நடக்கும்படிதான் திரைக்கதையை அமைத்திருக்கிறாராம் சிவா. அதேபோல் அந்த பீரியட் பகுதிதான் 3டியில் படமாக்கப்படும் என கூறப்படுகிறது. முக்கியமாக சிவா இயக்கிய அண்ணாத்த படம் கடுமையான ட்ரோல்களை சந்தித்தது. எனவே இந்தப் படத்தின் மூலம் அதற்கு பதிலடி கொடுக்க சிவா மும்முரமாக உழைத்திருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்திருக்கிறது.
மேலும் கங்குவா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இரண்டு பாகங்களுக்கான ஷூட்டிங்க்கை சிவா முடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. கண்டிப்பாக முதல் பாகம் மெகா ஹிட்டாகும்; எனவே இரண்டாம் பாகத்தையும் அதற்கு பிறகு வெளியிட்டால் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஷூட்டிங் முடிவு
படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்துவந்ததாக பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் கங்குவா படத்தின் ஷூட்டிங் குறித்து சூர்யா ஒரு அப்டேட்டை கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கங்குவா படத்தின் கடைசி ஷாட்டை முடித்துவிட்டேன். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டு கையில் வாளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இதன் மூலம் கங்குவா படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது என்பது உறுதியாகிவிட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
முடிவு
சூர்யாவின் கங்குவா படம் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். படம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
