‘விஜய் 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்று ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்படத்தின் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இந்த எதிர்பார்ப்பில் மிக முக்கிய பங்கு இருக்கிறது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் படத்தில் இணையும் வாய்ப்பு யுவனுக்கு அமைந்திருக்கிறது. கடந்த 2003ம் ஆண்டு கே.பி.ஜெகன் இயக்கத்தில் வெளியான ‘புதிய கீதை’ திரைப்படத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார்.
நடிகர்கள் விஜய், அஜித்துக்கும் இசையமைப்பாளர்களான இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான தொடர்பு இருக்கிறது. யுவனின் தந்தையும் இசையமைப்பாளருமான இளையராஜா நடிகர் விஜய்யின் ஒருசில படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், அத்திரைப்படங்களில் வெளிவந்த பாடல்கள் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்கள் பலராலும் கொண்டாடப்படுபவை.
அதில் ‘காதலுக்கு மரியாதை’, ‘ஃப்ரண்ட்ஸ்’ படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தவை. அந்தப் படங்களின் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்டானவை. ஆனால், நடிகர் அஜித்துக்கு இளையராஜாவின் இசையில் அப்படி ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமும், பொதுவான ரசிகர்களால் எப்போதும் பாடி மகிழும் பாடல்களும் அமையாதது ஒரு குறையாகவே இருந்து வருகிறது. ஒரே ஒரு பாடல் உண்டு ‘உல்லாசம்’ திரைப்படத்தில் வரும் ‘யாரோ யார் யாரோ’ பாடல், அஜித்துக்கு இளையராஜா பாடியிருப்பார். ஆனால், அந்தப் படத்தின் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா.
இந்த கணக்கு அப்படியே உல்டாவாக மாறி, நடிகர் அஜித்தின் ஒருசில படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். அந்த படங்களில் பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையும் பெரிதும் பேசப்பட்டவை.
குறிப்பாக அஜித்தின் அறிமுக காட்சிகள் மற்றும் மாஸ் காட்சிகளுக்கான யுவனின் தீம் மியூசிக்குகள் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவராலும் கொண்டாடப்படுபவை. இந்தக் கூட்டணியிவ் வெளிவந்த ‘பில்லா’, ‘மங்காத்தா’ படங்கள் மிகப் பெரும் வெற்றியை குவித்தன. அந்தப் படங்களின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டடித்தவை. ஆனால், நடிகர் விஜய்க்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் அதுபோன்று அமையாதது குறையாக தொடர்ந்து வருகிறது. இதுதான் இளையராஜா விஜய், யுவன் அஜித் ஆகிய 4 பேருக்கும் இடையே உள்ள தொடர்பு.