கலை, அறிவியல், பண்பாடு, சமூக சேவை என பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்தவர்களுக்கு இந்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
இந்த விருது விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, விஜயகாந்த் நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று அவரது நினைவிடத்திற்கு வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அங்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயகாந்த் அவர்களுக்கு பதம் பூஷண் விருது அறிவிக்கப்பட்டதற்கு மத்திய அரசிற்கு நன்றி தெரிவித்தார். ஆனால், இந்த விருது விஜயகாந்த் உயிருடன் இருந்தபோதே வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.
“விஜயகாந்த் அவர்களுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டதற்கு மத்திய அரசிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது அவரது திறமை மற்றும் சமூகப் பணிகளை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால், இந்த விருது விஜயகாந்த் உயிருடன் இருந்தபோதே வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் இந்த விருதைப் பெற்றிருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார். இந்த விருதைப் பெற்று அவர் செய்திருக்கும் பணிகளுக்கு மீண்டும் ஒரு முறை அங்கீகாரம் கிடைத்துள்ளது” என்று பிரேமலதா தெரிவித்தார்.
மேலும், இந்த விருதை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும், தேமுதிக கட்சி தொண்டர்களுக்கும் சமர்ப்பிப்பதாக பிரேமலதா தெரிவித்தார். “விஜயகாந்த் அவர்கள் தமிழக மக்களின் இதயத்தில் என்றும் நிலைத்திருக்கும். அவரது பணிகள் என்றும் அனைவரின் நினைவில் இருக்கும். இந்த விருதையும் அவரது பணிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று அவர் கூறினார்.
விஜயகாந்த் கொடுத்த அன்பு, அவருக்கு பலமடங்காக திரும்ப கிடைத்ததாகவும், அந்த அன்பு உள்ளங்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிப்பதாக அவர் கூறினார்.
இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவு செய்தி கேள்விப்பட்டு, தான் அதிர்ச்சியடைந்ததாக பிரேமலதா கூறினார். “பவதாரிணி அவர்கள் இளையராஜாவின் அன்புக்குரிய மகள். அவரது மறைவு திரையுலகிற்கும், தமிழக மக்களுக்கும் பேரிழப்பு. இனி அவரது இனிமையான குரலை கேட்க மாட்டோம் என்பது மிகுந்த துயரளிப்பதாக உள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகிற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரேமலதா கூறினார்.
