விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேரவந்த மாணவனுக்கு தலைமையாசிரியர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தார்.
இந்த ஆண்டு அரசுப்பள்ளியில் மாணவர்கள் சேருவது அதிகரித்துள்ளது. அதற்கேற்ப தமிழக அரசும் அரசுப்பள்ளியை மேம்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப்பள்ளியில் சேர வந்த மாணவனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஞானராஜ் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பதற்காகவும் அரசின் நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு சென்று அடைய வேண்டும் என்றும் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அரசுப் பள்ளியில் சேரவந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் ஸ்ரீஹரி என்பவரை பள்ளி நுழைவு வாயில் அருகே வரவேற்ற பள்ளி தலைமை ஆசிரியர், மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார்.
பின்னர், பள்ளியில் சேர்ந்த மாணவரின் குடும்பத்திற்கு தனது சொந்த பணத்தில் இருந்து ஆயிரம் ரூபாய் கொடுத்து ஊக்கப்படுத்தினார்.
இவர், கடந்த ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க புதிய ஆண்ட்ராய்டு மொபைல்களை தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்தார். இவர் கடந்த ஆண்டு நல்லாசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.