தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயில், பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் மார்கழி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் கடந்த 26-ந் தேதி நடைபெற்றது. இந்த கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கிரிவலத்தையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று (ஜனவரி 5-ம் தேதி) நடந்தது. கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நடைபெற்ற இந்த பணியில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதில், மார்கழி மாதத்திற்கான உண்டியல் காணிக்கையாக ரூ. 3 கோடியே 15 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்கள் செலுத்தியிருந்தனர். மேலும், 210 கிராம் தங்கம், 1 கிலோ 695 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தியிருந்தனர்.
இந்த தொகை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.
அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, சமீபகாலமாக உண்டியல் காணிக்கை மாதந்தோறும் 4 கோடியை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
