இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஸ்ணுவிஷால், தம்பி ராமையா, செந்தில் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லால்சலாம். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா விக்ராந்த், விஸ்ணுவிஷால், தம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய தம்பி ராமையா, ராமர் கோயில் திறப்பு விழா பற்றியும், இந்து-இஸ்லாமிய ஒற்றுமை குறித்தும் பேசினார்.
அவர் பேசுகையில், “கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமர் கோயில் பிரதிஷ்டை நடந்தது. அப்போது இஸ்லாமியப் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘ராம் ரகீம்’ எனப் பெயர் சூட்டியிருக்கிறார்.
இந்த தாயின் குணம் தான் தற்போது உருவாகி இருக்கும் ‘லால் சலாம்’ படத்தின் கதை. படம் கண்டிப்பாக எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா அவர்களுக்கு அடுத்ததாக பெண் இயக்குநர்கள் ஃபீல் குட் படங்கள்தான் எடுப்பார்கள் என்பதை உடைத்து ஒரு ஆண் இயக்குனருக்கு இணையாக ஐஸ்வர்யா நல்ல படத்தை எடுத்து இருக்கிறார்.
ரஜினி சார் சிவாஜி ராவாக வந்தவர் காந்தாக மாறி கருப்பு என்பதை திராவிட இனத்தின் நிறம் என்பதை நிரூபித்தார். கடந்த 1996 ஆம் ஆண்டு சமயத்திலே முதல்வர் நாற்காலி அவரை வந்தமர அழைத்தது. ஆனால் அதனை ரஜினிகாந்த் தனது ஞானத்தால் மறுத்தார். சினிமா உயிரோடு இருப்பதற்கு ரஜினிகாந்த் தேவை” என்று கூறினார்.
தம்பி ராமையா பேச்சு ரசிகர்களை நெகிழ வைத்தது. இந்து-இஸ்லாமிய ஒற்றுமையை வலியுறுத்தும் லால் சலாம் திரைப்படம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
