சென்னை: கிரிக்கெட் விளையாட்டு, அதில் நடக்கும் மதம் சார்ந்த அரசியலை மையமாக வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள படம் ‘லால் சலாம்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய ஐஸ்வர்யா, “அப்பாவை சங்கி என்று அழைப்பது கஷ்டமாக உள்ளது. அவர் சங்கி கிடையாது. சங்கியாக இருந்திருந்தால் இந்த படத்தில் அவர் நடித்திருக்க மாட்டார்” என்று கூறினார்.
இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி, ரஜினிகாந்த் மீது விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நேற்று வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘லால் சலாம்’ படம் குறித்தும், ஐஸ்வர்யாவின் பேச்சு குறித்தும் அவர் பேசினார்.
“சங்கி என்பது கெட்டவார்த்தை அல்ல. அந்த அர்த்தத்தில் ஐஸ்வர்யா சொல்லவில்லை. அப்பா ஆன்மிகவாதி, எல்லா மதத்தையும் விரும்புகிறவர் என்பது அவரது கருத்து. லால் சலாம் படத்தை விளம்பரம் செய்ய சங்கி என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. ‘லால் சலாம்’ படத்தில் மத நல்லிணக்கத்தை பற்றி பேசி உள்ளார். படம் நன்றாக வந்துள்ளது” என்று ரஜினிகாந்த் கூறினார்.
மேலும், “நான் சங்கி இல்லை. நான் ஆன்மிகவாதி. எல்லா மதத்தையும் விரும்புகிறேன். மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதே என் நோக்கம்” என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
