தீர்மானம் 1: தொகுதி மறுசீரமைப்பு
2026-க்குப் பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்.
தவிர்க்க முடியாத காரணங்களால் மக்கள்தொகை அடிப்படையில் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தற்போது மாநில சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூகப் பொருளாதார வளர்ச்சி திட்டங்களையும், மக்கள் நல்வாழ்வு திட்டங்களையும் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது.
தீர்மானம் 2: ஒரு நாடு ஒரு தேர்தல்
‘ஒரு நாடு ஒரு தேர்தல்’ என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று.
இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பரந்து விரிந்த நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள், மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்தே நடத்தப்படுவதால் ‘ஒரு நாடு ஒரு தேர்தல்’ திட்டத்திற்கு எதிரானது.
அதிகாரப் பரவலாக்கல் என்ற கருத்தியலுக்கு ‘ஒரு நாடு ஒரு தேர்தல்’ திட்டம் எதிரானது.
‘ஒரு நாடு ஒரு தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த இரண்டு தீர்மானங்களையும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
