நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் தலைப்பு ‘அமரன்’ என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.
தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் மற்றும் ஆர்.மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.
1992-ம் ஆண்டு கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் கார்த்திக் நடித்த படத்திற்கும் ‘அமரன்’ என்றே தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. அதே தலைப்பை தற்போது சிவகார்த்திகேயன் படத்திற்கு வைத்திருப்பது ஏன்? என்ற கேள்வி பலரால் எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, “இந்தப் படத்தின் திரைக்கதைக்கு நான் எழுதிய முதல் வார்த்தை ‘அமரன்’. அதற்கு அழியாதவன், போர்வீரன், தெய்வீகமானவன் என்று பொருள். இந்த நினைவு கூரத்தக்கத் தலைப்பை வழங்க சம்மதித்த இயக்குநர் கே. ராஜேஷ்வர், கவுதம் கார்த்திக் மற்றும் கார்த்திக் ஆகியோருக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
