Aayiram Porkaasukal Review:ஆயிரம் பொற்காசுகள் – கிராமத்து வாழ்க்கையின் சுவாரஸ்யமான கதை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விதார்த் நடிப்பில், ரவி முருகையா இயக்கத்தில் வெளியாகியுள்ள ஆயிரம் பொற்காசுகள் படம், குடும்பத்துடன் பார்க்க ஏற்ற ஒரு நகைச்சுவையான படமாக அமைந்துள்ளது.
ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் சரவணன், அரசின் இலவச அரிசியை வாங்கிக் கொண்டு, பக்கத்து வீட்டில் சுற்றி திரியும் கோழியை அடித்து குழம்பு வைத்து சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார். அவரது அக்கா பையனான விதார்த், சில நாட்கள் அவருடன் அந்த ஊரில் தங்கும் நிலை ஏற்படுகிறது.
மத்திய அரசின் இலவச கழிப்பறை திட்டம் அந்த ஊருக்கு வருகிறது. சரவணன் மற்றும் விதார்த் அவரது வீட்டில் கழிப்பறைக்காக குழி தோண்டும் போது ஆயிரம் பொற்காசுகள் அவர்களுக்கு கிடைக்கிறது. இதனை ஜார்ஜ் மரியான், சரவணன், விதார்த் மூன்று பேரும் பங்கு போட திட்டமிடுகின்றனர்.
ஆனால் இந்த விஷயம் ஊரில் உள்ள ஒவ்வொருவருக்காக தெரிய வருகிறது. ஊர் மக்கள் அனைவரும் அந்த ஆயிரம் பொற்காசுகளில் பங்கு கேட்டு வந்து தொல்லை கொடுக்கின்றனர். இறுதியில் அந்த ஆயிரம் பொற்காசுகளும் யார் கையில் சென்று சேர்ந்தது என்பதே படத்தின் கதை.
எதார்த்தமான வாழ்வியலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், விதார்த் மற்றும் சரவணன், கிராமத்து மக்களாக எந்தவித பில்டப்புகளும் இல்லாமல் நடித்துள்ளனர். குறிப்பாக சரவணனுக்கு இந்த படம் ஒரு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்துள்ளது. விதார்த் வழக்கம் போல தனது எதார்த்தமான நடிப்பை படம் முழுக்க கொடுத்துள்ளார்.
ஜார்ஜ் மரியான், வணக்கம் கந்தசாமி, பாரதி கண்ணன் போன்றவர்களும் படம் முழுக்க சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இவர்களது காமெடிகளும் பல இடங்களில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது.
படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருந்தாலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரும் ஒன்று சேரும் இடம் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு 15 முதல் 20 நிமிடங்கள் வயிறு குலுங்க ரசிகர்கள் சிரிக்கின்றனர்.
படம் முழுக்க ஆங்காங்கே வரும் சின்ன சின்ன ட்விஸ்டுகளும் நன்றாக இருந்தது. கேமரா மேன் பானு முருகன், இசையமைப்பாளர் ஜோஹன் சிவனேஷ், எடிட்டர் ராம் & சதீஷ் அவர்களது வேலையை சிறப்பாக கையாண்டுள்ளனர்.
பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்ற பழமொழிக்கு ஏற்றால் போல பணத்திற்காக அனைவரும் என்ன என்ன செய்வார்கள் என்று நகைச்சுவையான கதையை கூறி உள்ளார் இயக்குனர்.
ஹீரோயின் கதாபாத்திரம் மட்டும் ஏன் இப்படி வைத்தார்கள் என்று தெரியவில்லை, அதை மட்டும் சற்று மாற்றி அமைத்து இருக்கலாம். அதேபோல படத்தில் பலர் புதிய முகங்களாக இருப்பதால் அவர்களுக்கு நடிப்பதில் சிரமம் உள்ளது. மேலும் சில லாஜிக் மீறல்களும் உள்ளன.
ஆனாலும், கிராமத்து வாழ்க்கையின் சுவாரஸ்யமான கதை, நகைச்சுவையான காட்சிகள், நல்ல நடிப்பால் ஆயிரம் பொற்காசுகள் குடும்பத்துடன் நிச்சயம் பார்க்க கூடிய படமாக அமைந்துள்ளது.
ரேட்டிங்: 3.5/5
