நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங்கை பிப்ரவரி மாதத்தில் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. மார்ச் மாதத்தில் அஜித் தன்னுடைய ஏகே63 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார். இந்தப் படத்தை சமீபத்தில் மார்க் ஆண்டனி என்ற ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் முன்னதாக நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் நடித்துள்ளார். அந்தப் படத்தின் சூட்டிங்கின்போது, அஜித் தன்னுடைய பார்வையை மாற்ற அறிவுறுத்தியதாகவும் அதுவே தன்னை மார்க் ஆண்டனி போன்ற படத்தை இயக்க உத்வேகப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தான் அஜித்தின் மிகபெரிய ரசிகர் என்பதையும் அவர் உற்சாகமாக வெளிப்படுத்தியிருந்தார்.


இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அஜித்தை இயக்கும் வாய்ப்பு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன், மார்க் ஆண்டனி படத்தை பார்த்து ஆதிக்கை பாராட்டியதாகவும் அவரது குருவான அஜித்தை இயக்குவதற்கு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.


மார்ச் மாதத்தில் சூட்டிங் துவங்கவுள்ள ஏகே63 படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க கமிட்டாகியுள்ளார். காமெடி, ஆக்ஷன் என ஏகே63 படத்தை சிறப்பாக கொடுக்க ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் அவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், அஜித்துடனான படம் அவரது கேரியரில் பெஸ்ட்டான தருணங்களை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


இந்தக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் ஆக்ஷன் காட்சிகள், ஆதிக் ரவிச்சந்திரனின் திரைக்கதை, தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை என அனைத்தும் சிறப்பாக அமைந்து, ஏகே63 படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கலாம்.
