கேஜிஎஃப், சலார் போன்ற பான் இந்தியா வெற்றிப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், தனது அடுத்தப் படத்தில் அஜித் குமாருடன் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிரசாந்த் நீல் 2014ஆம் ஆண்டு கன்னடத்தில் “உக்ரம்” என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 2018ஆம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியான “கேஜிஎஃப்” படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அடுத்தடுத்து வெளியான “கேஜிஎஃப் 2” மற்றும் “சலார்” படங்களும் மாபெரும் வெற்றி பெற்றன.
இந்நிலையில், பிரசாந்த் நீல் அஜித் குமாருடன் இணைவார் என்று கடந்த சில ஆண்டுகளாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. இருப்பினும், இதுவரை அவை உறுதியாகவில்லை. இந்நிலையில், இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அஜித்தின் 65வது படமாக இந்தப் படம் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த கூட்டணி உறுதியானால், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.
