தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நிறுத்தப்பட்டுள்ளது.
இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் அஜர்பைஜானில் நடந்து வருகிறது. பிப்ரவரியில் படப்பிடிப்பை முடித்து ஏப்ரலில் படத்தை ரிலீஸுக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், அஜர்பைஜானில் நிலவி வரும் கடுங்குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலைமை இன்னும் ஒரு வாரம் வரை நீடிக்குமாம். அதனால், அதுவரை அத்தனை பேரையும் அங்கேயே வைத்திருப்பது என்பது சாத்தியமில்லை என்று கருதி, விடாமுயற்சி படக்குழு நாளை சென்னை திரும்புகிறது.
அஜித்குமார் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவருக்கு துபாயில் வீடு இருப்பதால், அங்கேயே தங்கி இருக்கவும் வாய்ப்புள்ளது.
இந்த தகவல் அஜித் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால், படம் வெளியீடு ஆகும் தேதி தள்ளிப்போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
