தமிழ் திரையுலகில் கதை திருட்டு பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் படத்தின் கதை எழுத்தாளர் வேல ராமமூர்த்தியின் பட்டத்து யானை நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் எழுத்தாளர் வேல ராமமூர்த்தியின் கண்டனத்தைத் தூண்டியுள்ளது.
இதுகுறித்து வேல ராமமூர்த்தி கூறுகையில், “கேப்டன் மில்லர் படத்தின் கதை எனது பட்டத்து யானை நாவலை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளதாக கேள்விப்பட்டேன். நான் எழுதிய பட்டத்து யானை நாவலின் ஹீரோ பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து பின்னர் அதிலிருந்து வெளியேறி எப்படி சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பான் என்பது தான் கதை. அதனை கொஞ்சம் மாற்றி கேப்டன் மில்லர் படமாக எடுத்துள்ளனர்.
இதெல்லாம் செய்ய அசிங்கமா இல்லையா, பட்டத்து யானை நாவலை எழுதிய நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன். என்னிடம் ஒருவார்த்தை கேட்டிருக்கலாம் அல்லது அனுமதி வாங்கியிருக்கலாம். நான் எழுதுவதெல்லாம் எனது ஊரின், எனது மக்களின் வாழ்வியல். இதனை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் திருடிவிடுகின்றனர். கேப்டன் மில்லர் மட்டுமல்ல இன்னும் பல படங்களிலும் எனது கதைகள், சீன்கள் திருடப்பட்டுள்ளன.
ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் கூட எனது நாவலில் இருந்து சீன்கள் வைக்கபட்டுள்ளதாக தனது வாசகர்கள் வேதனை தெரிவித்திருந்தனர். இப்படி கதையை திருடுபவர்கள் எல்லாம் மனசாட்சியே இல்லாமல் பேசுவார்கள். அப்படியும் ஆதாரத்துடன் கேட்டால் நம்மையே அசர வைக்கும் படி பதில் வரும். கேப்டன் மில்லர் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன்.
புகார் தந்தாலும்.. வலுத்தவன் பக்கம்தான் நியாயம் பேசுவார்கள். பேர், ஊர், சீக்வன்ஸ் போன்றவற்றை மாற்றி படத்தை எடுத்திருப்பார்கள். இதெல்லாம் அவர்கள் தப்பிக்க செய்யும் முன்னேற்பாட்டு யுக்திகள். தமிழ் திரையுலகில் இப்படி அடிக்கடி நடப்பது அசிங்கமாக உள்ளது. ஒரு படைப்பாளியாக இது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று வேல ராமமூர்த்தி கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து இயக்குநர் அருண் மாதேஸ்வரனோ அல்லது படக்குழுவினரோ இதுவரை விளக்கம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தனுஷும் இதுவரை கேப்டன் மில்லர் கதை திருட்டு பிரச்சினை குறித்து தனது கருத்தை பகிரவில்லை.
கதை திருட்டு பிரச்சினைக்குத் தீர்வு என்ன?
தமிழ் திரையுலகில் கதை திருட்டு பிரச்சினை என்பது புதியதல்ல. கடந்த சில ஆண்டுகளில் இந்த பிரச்சினை மேலும் அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம், திரையுலகில் உள்ள சிலரின் சுயநலமும், சட்டப்பிழைகளுக்கு தண்டனை வழங்கும் அமைப்புகளின் பலவீனமும் ஆகும்.
இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண, திரையுலகில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கதை திருட்டுக்கு தண்டனை வழங்கும் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும். மேலும், திரையுலகில் உள்ள கலைஞர்கள் தங்கள் கதைகளை சட்டப்படிப் பதிவு செய்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
கதை திருட்டு போன்ற சட்டப்பிழைகளை தடுக்கவும், படைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், திரையுலகில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
