நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டியாக இருந்தாலும், ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்தது.
இதற்கு காரணம், இந்த சீசனில் முதன்முறையாக தோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பேட்டிங் செய்ய வந்ததுதான். வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனி களமிறங்கியபோது, ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.
ஆனால், தோனி பேட்டிங் செய்ய வருவதற்கு தயாராக இருப்பது போல் திரையில் காட்டப்பட்ட பிறகு, திடீரென ஜடேஜா பேட்டிங் செய்ய வந்தார். இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள், ஜடேஜா தங்களை “பிராங்க்” செய்ததாக நினைத்தனர்.
ஆனால் உண்மையில், தோனிதான் ஜடேஜாவை இப்படி செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. துஷார் தேஷ்பாண்டே கூறுகையில், “நான் பேட்டிங் செய்யப் போகிறேன். ஆனால் அதற்கு முன் நீங்கள் பேட்டிங் செய்ய போவதாக நடிக்க ஜடேஜாவிடம் தோனி கூறியதை நான் கேட்டேன்,” என்றார்.
ஜடேஜா கூறுகையில், “அவர் பேட்டிங் செய்ய வருவதாக திரையில் காட்டியதுமே ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவர்களின் பணத்திற்கு மதிப்பு கிடைத்தது போல அது,” என்றார்.
மேலும் துஷார் தேஷ்பாண்டே நேற்றைய போட்டி குறித்து பேசும்போது, “ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் எங்களிடம் திட்டங்கள் இருக்கிறது. சில பேட்ஸ்மேன்களுக்கு இன்னும் கொஞ்சம் நல்ல திட்டம் எங்களுக்கு தேவை. பில் சால்ட்டுக்கு ஜடேஜா ஒரு நல்ல கேட்ச் எடுத்தார். சால்ட் இந்த ஐபிஎல் சீசனில் பேட்டிகள் நல்ல நிலையில் இருக்கிறார். அவரது விக்கெட்டை முதல் பந்திலேயே எடுக்க முடிந்தது நல்ல விஷயம். ரசல் எவ்வளவு அதிரடியான வீரர் என்பது எல்லோருக்குமே தெரியும். இந்த ஆடுகளத்தில் 20 – 25 ரன்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். எனவே கடைசிக் கட்டத்தில் அவரது விக்கெட்டை நான் எடுத்தது மிகவும் முக்கியமானதாக அமைந்தது,” என்றார்.
