திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு வரும் 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சேலத்தில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
திமுக இளைஞரணி 1980-ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. தற்போது திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக இளைஞர் அணியை வலுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட உதயநிதி, டிசம்பர் 17-ம் தேதி சேலத்தில் மிகப்பெரிய அளவில் இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெறும் என அறிவித்தார்.
இதற்காக தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், இரு சக்கர பேரணி தொடங்கப்பட்டது. இதற்காக சேலத்தில் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.
இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக டிசம்பர் 24-ம் தேதிக்கு மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி ஆகிய நான்கு தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் திமுக இளைஞர் அணி மாநாடு மீண்டும் இரண்டாவது முறையாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு வரும் 21-ந்தேதி சேலத்தில் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் திமுக இளைஞர் அணியின் புதிய தலைமை தேர்வு செய்யப்படவுள்ளது. மேலும், திமுக அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டை முன்னிட்டு சேலத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநாட்டுக்கு வருகை தரும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
