நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளதால், வனவிலங்குகளுக்கு தினமும் டேங்கர் லாரிகள் மூலம் குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும்போது, முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வனங்கள் பச்சை பசேலென காட்சியளிக்கும். அதன்பின், வடகிழக்கு பருவமழை இப்பகுதிகளில் அதிகளவு இருக்காது. இதனால், வனங்களில் உள்ள நீரோடைகள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் குறைந்துவிடும்.
நவம்பர் மாதம் முதல் இப்பகுதிகளில் உறைப்பனி விழத்துவங்கும். இதனால், வனங்கள், புற்கள் அனைத்தும் காய்ந்து விடும். அதேபோல், வனங்களில் உள்ள நீரோடைகள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் முழுமையாக குறைந்து வறட்சி ஏற்படும்.
இம்முறையும் கடந்த நவம்பர் மாதம் முதல் இப்பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும், பகல் நேரங்களில் வெயில் அதிகமாக உள்ளதால், முதுமலையில் உள்ள குட்டைகளில் தண்ணீர் இன்றி வறட்சி ஏற்பட்டுள்ளது. மேலும், புற்கள் மற்றும் வனங்கள் காய்ந்து போயுள்ளன. இதனால், யானை, காட்டுமாடுகள் மற்றும் மான்கள் உட்பட வன விலங்குகள் தற்போது நீர் நிலைகளை தேடி இடம் பெயர துவங்கியுள்ளன.
இந்நிலையில், வனவிலங்குகளின் தாகத்தை போக்கும் வகையில், தற்போது வனத்துறை சார்பில் விலங்குகள் தண்ணீர் குடிக்கும் குட்டைகளில் நீர் நிரப்பும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள குட்டைகளில் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுச் செல்லப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது.
நாள் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வரை வன விலங்குளுக்காக கொண்டுச் செல்லப்பட்டு குட்டைகளில் நிரப்பப்பட்டு வருகிறது. இதனால், இங்குள்ள யானைகள் மற்றும் மற்ற வன விலங்குகள் இந்த தண்ணீரை பருகி செல்கின்றன.
தற்போது, இப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், உறைப்பனி விழுவதாலும், மேலும் வனங்கள் காய்ந்து போக வாய்ப்புள்ளது. இதனால், வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் நாள் தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் தினமும் ஊற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்
முதுமலை புலிகள் காப்பகம் உலகின் மிக முக்கியமான வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்றாகும். இங்கு பல்வேறு வகையான வன விலங்குகள் வாழ்கின்றன. வறட்சி காரணமாக வன விலங்குகள் பாதிக்கப்படுவதை தடுக்க வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது.
ஆனால், வறட்சியின் தாக்கம் அதிகரித்து வருவதால், வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் போதுமானதாக இருக்காது. எனவே, வனத்துறை சார்பில் தண்ணீர் நிரப்பும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், வன விலங்குகள் நீர்நிலைகளை எளிதாக அணுகும் வகையில், குட்டைகள் மற்றும் நீரோடைகளை பராமரிக்க வேண்டும்.
