இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 47.
கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலுக்காக பவதாரிணிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து, ‘ராசய்யா’, ‘அலெக்சாண்டர்’, ‘தேடினேன் வந்தது’, ‘காதலுக்கு மரியாதை’, ‘அழகி’, ‘பிரண்ட்ஸ்’, ‘தாமிரபரணி’, ‘உளியின் ஓசை’, ‘கோவா’, ‘மங்காத்தா’, ‘அனேகன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.
கடந்த 5 மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்ற அவர், அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 5.20 மணி அளவில் இலங்கையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது உடல் வெள்ளிக்கிழமை மாலை சென்னை கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இவரது மறைவிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், இயக்குநர் பாரதிராஜா, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இயக்குநர் பா.ரஞ்சித், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இளையராஜா குடும்பத்திற்கும், ரசிகர்களுக்கும் இந்த இழப்பு மிகவும் வேதனையாக இருக்கும். பவதாரணி அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
